நியூஸ் ஜெ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

சென்னை,
அம்மாவின் புகழ், கழக அரசின் சாதனைகளை உலகம் முழுவதும் பரவிட செய்வதுடன் தமிழக மக்களுக்கு புதிய அனுபவத்தை நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிச்சயம் அளிக்கும் என்று லோகோ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, கைப்பேசி செயலி, வலைதளம் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

நாட்டு நடப்புகளை, நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், ஆதிகாலம் தொட்டே மனிதனுக்கு அமைந்த குணநலன் ஆகும். மனிதன், தனது சிந்தனையை செயலாக்குகின்ற நாகரிக மனிதனாக மாறத் தொடங்கியதும், ஏன்?, என்ன?, எதற்கு?, எப்படி?, எப்போது?, எங்கே?, எவ்வகையில்?, யார்?, யாரால்?, யாருக்காக?,என்ற பத்து கேள்விகள் அவனைச் சுற்றி சுழன்று வந்தன.

தன்னைச் சுற்றியும், அதற்கு அப்பாலும் நடக்கும் பிரச்சினைகளில், இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் தேடும் ஆவலும், அந்த பதில்களை விரைந்து பெற்றிட வேண்டும் என்ற அவசரமும், புதிய புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க
அவனைத் தூண்டியது. அத்தகையதொரு அரிய கண்டுபிடிப்புதான், செய்திகளை முந்தித் தரும் பத்திரிகைகளின் உருவாக்கம்.அச்சுக் கலை, மானுட நாகரிக வளர்ச்சிக்கு உரம் சேர்த்தது. அந்த அச்சுக்கலை நாட்டுக்கு அளித்த நற்கொடை யான பத்திரிகைகள், நாட்டையே புரட்டிப்போட்டது.நாட்டை ஆளும் மன்னவனின் வாள் முனையை விட, ஒரு பத்திரிகை யாளனின் பேனா முனை வலிமையானது என்று எடுத்துக் காட்டியது.

அச்சுக் கலையை உலகம் அறிந்து கொள்வதற்கு முன்னர், தகவல்கள், வாய்வழியாக, பேச்சு வடிவாக பரிமாறிக் கொள்ளப் பட்டது. அச்சுக்கலை உலகை பேச்சிலிருந்து எழுத்துக்கு பயணப்பட வைத்தது அதன் பயனாய் பத்திரிகைகள்பிறந்தன. உலகத் தகவல்களை விரைவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா,எழுத்திலிருந்து ஒலி வடிவத்திற்கு மாற்றியது. அதுதான், ரேடியோ என்னும் விஞ்ஞானப் புதுமையை நாடு எதிர் கண்டது.

இதுவும் போதாது, உலக நிகழ்வுகளை உடனுக் குடன் அறிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற பேராவல் உந்தித் தள்ள, விஞ்ஞான வளர்ச்சி, ஒலி அமைப்பிலிருந்து, காட்சி அமைப்புக்கு கொண்டு வந்து சேர்த்தது. அதன் விளைவாக தொலைக் காட்சிகள்உருவாகின.ஒரு செய்தியை அறிந்து கொள்ள, பத்திரிகைகளில் அந்த செய்தியை படித்திட, மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும் என்றிருந்த நிலையை, தொலைக்காட்சி முற்றிலுமாக மாற்றியது.

உலகின் எந்த மூலையிலும் நடக்கின்ற எந்த ஒரு செய்தியையும், அடுத்த கணமே ,நம் கண் முன்னே காட்சியாக கண்டு அறிந்திட முடியம் என்ற நிலையை உருவாக்கி,தகவல்களைப் பரிமாறுவதிலும், செய்திகளை வழங்குவதிலும் தொலைக் காட்சிகள் இன்று ஓர் புதுமையை, ஓர் புரட்சியைப் படைத்து வருகின்றன. இந்த விஞ்ஞான வளர்ச்சியின் புது வரவாக, புதுமையின் உருவாக, புத்தாக்கத்தின் நல் அரும்பாக, “நியூஸ் ஜெ” அலைவரிசைத் தொலைக்காட்சி மிக விரைவில் மலரஇருக்கிறது.

அரசியலின் ஆழ் நுணுக்கங்களை நம்மை அறியச் செய்த அறிவுலக மேதை…இதயத்தில் வலுவேற்றி இயக்கத்தை வல்லமை செய்து புதுமைகள் தினம் படைத்த ஆற்றல் பெருந்தலைவி…!ஒன்றரைக் கோடித் தொண்டர்களை ஒருமித்த கருத்துடன் வழி நடத்திய அரசியல் ஆசான்…!

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நெடும்புகழை இந்த நீடுலகம் முழுமையும் “நியூஸ் ஜெ” தொலைக்காட்சி பரவிடச் செய்திடும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்டெடுத்த புதுமை இயக்கம்…புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்த புரட்சி இயக்கம்…அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்கொள்கைகளை, கோட்பாடுகளை“நியூஸ் ஜெ” தொலைக்காட்சி இப்பூவுலகம் உணர்ந்திடச் செய்திடும்.

அம்மா அவர்கள் உயிர் கொடுத்து உருவாக்கிய அம்மா அவர்களது அரசு, வலிமை மிக்க வல்லரசாய்,வாய்மை கொண்ட சொல்லரசாய், தூய்மை படைத்த நல்லரசாய் மக்கள் நலம் கருதி செயல்படுத்தும் திட்டங்களை,அத்திட்டங்களின் பயன்களை, தமிழக மக்களை அறிந்திடச் செய்து அவர்கள் பெரும்பயன் பெற்றிட“நியூஸ் ஜெ” வகை செய்திடும்.

பத்தோடு பதினொன்றாக இல்லாமல், புத்திளமை முறுக்கோடும்,புதுமையின் கருத்தோடும்,“நியூஸ் ஜெ” அலைவரிசை தொலைக் காட்சி தொடங்கப்பட, இருப்பதன் முன்னோட்டமாக அதன் இலட்சினை, கைபேசிச் செயலி ஆகியவற்றை அறிமுகப் படுத்தி,“நியூஸ் ஜெ” தொலைக்காட்சி வலைதளத்தை தொடக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.“நியூஸ் ஜெ” தொலைக்காட்சி எப்போது சோதனை ஓட்டத்தை தொடங்கும்,அந்த சோதனை ஓட்டம் முடிந்து தனது நிகழ்ச்சி களை எப்போது முழுமையாகத் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்த்து உங்களைப் போலவே நானும் ஆவலாக
இருக்கிறேன்.

ஒரு நிலை சாராமல் நடுநிலையுடன் செய்திகள் வெளியிட ஒரு தொலைக்காட்சி வேண்டும் என்று எண்ணினோம், புரட்சித் தலைவரின் பெரும் புகழை, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் போற்றுதற்குரிய செயல்களை, அம்மா அவர்களின் வழிநடக்கும் அரசின் ஏற்றமிகு சாதனைகளை எடுத்துச் சொல்ல ஒரு தொலைக்காட்சிஇல்லையே என்று ஏங்கினோம், அந்தக் கனவு நனவாகப் போகிறது என்றமகிழ்ச்சியுடன் நான் மட்டுமல்ல, ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

செய்திகளை வழங்குவதில் இரண்டு வகைகள் இருக்கின்றன.ஒன்று. களத்திற்கு சென்று நேரில் காண்பதைஇடைச் செருகல் இன்றி செய்தியாகத் தருவது. இன்னொன்று, அலுவலகத்தில் இருக்கையில்அமர்ந்து கொண்டே, கற்பனையில் காட்சிகளை ஓடவிட்டு, வெட்டி, ஒட்டி, எண்ணம் போல செய்திகளைத் தருவது இந்த இரண்டாவது வகைக்கு, என்றைக்குமே “நியூஸ் ஜெ” வில் இடம் இருக்காது.

செய்திகளை பரபரப்புக்காக உருவாக்காமல், உள்ளது உள்ளபடி சொல்லுகின்ற செய்தி அமைப்பாக தமிழக மக்களின் உள்ளங்களை “நியூஸ் ஜெ”தொலைக்காட்சி நிச்சயம் கவர்ந்திடும். தொலைக்காட்சிப் பெட்டியில் திறக்கப்படும் அலை வரிசைகள் உண்மை நிலையை மறைத்து ஒரு சார்பு செய்திகளாக வழங்கப்படுவதைப் பார்த்து புளித்துப்போன தமிழக மக்கள், ஓர் புது அனுபவத்தை எதிர்நோக்கி காத்திதிருக்கிறார்கள்.அந்தப் இனிய அனுபவத்தை“நியூஸ் ஜெ” தொலைக்காட்சி நிச்சயம் அளிக்கும் என்று உறுதியுடன் தெரிவித்து,அமைகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?