Jaya speaks: INDEPENDENCE DAY 15 August, 2011
தமிழக மக்களிடையே மீண்டும் சுதந்திர உணர்வு: முதல்வர் சென்னை, ஆக.15: இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் உள்ள கோட்டையில் கொடியேற்றி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தினச் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரை: வரலாற்று சிறப்புமிக்க இந்த புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திலிருந்து பாரதத் தாயின் மணிக்கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலைப் பெற்று 64 ஆண்டுகள் முடிந்து விட்டன. 65-வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய வேளையில், வங்கக் கடலோரம் வீசும் மெல்லிய பூங்காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் இந்த மணிக்கொடி, ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாம் இந்த சுதந்திரம் பற்றிய பல்வேறு உணர்வுகளை இத்தருணத்தில் நம்முள்ளே கிளர்ந்தெழச் செய்கிறது. இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம். வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் ...